LOADING...
எடப்பாடிக்கு அடுத்தடுத்து விழும் அடிகள்: நாளை தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
நாளை தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

எடப்பாடிக்கு அடுத்தடுத்து விழும் அடிகள்: நாளை தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
12:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மிக மோசமான உட்கட்சிப் பூசலையும், சரிவையும் சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் உச்சக்கட்டமாக, அதிமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளையும், கட்சிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு, நாளை முறைப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளனர்.

இணைப்பு விழா

மாமல்லபுரத்தில் தயாராகும் பிரம்மாண்ட இணைப்பு விழா

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்டத்தின் வலுவான தலைவரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை (ஜூலை 2) காலை 9.00 மணியளவில் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தங்களை முறைப்படி தவெகவில் இணைத்துக் கொள்கின்றனர். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த மெகா இணைப்பு விழாவில், இவர்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதால் மாமல்லபுரமே அரசியல் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

அறிக்கை

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அதிகாரப்பூர்வ அறிக்கை

தமிழக வெற்றி கழகத்தில் இணைவதை உறுதிசெய்து முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடரப் போவதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்துத் துறையில் தாம் ஆற்றிய பொற்கால பணிகளையும், கொரோனா கால மக்கள் சேவைகளையும் அவர் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement

அதிமுக கோட்டை

புதுக்கோட்டையில் உடையும் அதிமுக கோட்டை

அதிமுக தலைமைக்கு எதிரான இந்த அதிருப்தி அலை மாவட்ட அளவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து பி.கே.வைரமுத்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவரும் அவரது ஆதரவாளர்களான 300-க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே அறந்தாங்கி நகரச் செயலாளர் ஆதி மோகன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நிகழும் இந்த மாற்றங்கள் அதிமுக கூடாரத்தை பெருமளவில் உலுக்கியுள்ளன.

Advertisement