சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இன்று(ஜூலை.,20) விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி உத்தரவினை ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து தன்னையும், தன்னை சேர்ந்தோரையும் விடுவிக்க கோரி அமைச்சர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்ட ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கு என வாதம்
இதற்கான விசாரணைக்காக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட்.,27ம்தேதி இவர் நேரில் ஆஜராகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் மற்றும் வாதங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, தன் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று அமைச்சர் தரப்பில் வாதாடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பினை இன்று(ஜூலை 20)வழங்கிய நீதிபதி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் அவரின் உதவியாளர் உள்ளிட்ட 3 பேரையும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.