சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டம்!
தமிழகத்தில் இருக்கும் ஆவின் விற்பனை நிலையங்களில் தற்போது சில சாக்லேட் வகைககள் தயாரித்து வழங்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவை போதுமானதாக இல்லாததால், சாக்லேட் வகைகளின் விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, அம்பத்தூரில் ஒரு சாக்லேட் தயாரிப்பு ஆலையை நிறுவனம் அமைக்க உள்ளது. இது சம்மந்தமாக, ரூ.1 கோடி மதிப்பில் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், பழங்களை பயன்படுத்தி சாக்லேட் வகைகள் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 கிராம் எடை கொண்ட சாக்லேட் பாக்கெட்களையும் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை
பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம், தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து விற்பனை செய்து வருகிறது . இதற்காக தினசரி 30 லட்சம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது. அதோடு, ஆவின் நிறுவனம், 220-க்கும் மேற்பட்ட பால் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, ஆவின் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் முடிவில் அதற்கான ஆயத்த பணிகளையும் தொடங்கியுள்ளது. தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.