போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம்
சென்னை மாநகரில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர பால் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் பாலினை விநியோகம் செய்து வருகிறது ஆவின் நிறுவனம். இதனிடையே, போலி ஆவின் மாதாந்திர பால் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது இந்த போலி மாதாந்திர அட்டைகளை கணினி பதிவில் இருந்து நீக்குவதற்கான பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பால் அட்டைகளை புதுப்பிக்க தங்களது ரேஷன் அட்டை அல்லது வீட்டு வாடகைக்கான ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றை கொடுத்தால் மட்டுமே, அட்டைகளை புதுப்பிக்க முடியும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தினமும் மாதாந்திர அட்டைகள் மூலம் 6.5 லட்ச லிட்டர் பால் விற்பனை
மேலும், பால் அட்டைகளை புதுப்பிக்க இந்த ஆவணங்களை தங்களது மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல், ஒரு அட்டைக்கு, ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு இந்த மாதாந்திர அட்டைகள் மூலம் 6.5 லட்ச லிட்டர் பாலினை விற்பனை செய்கிறது. இதில் 2 லட்ச லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்கள், 4 லட்சம் நீல நிற பால் பாக்கெட்கள், 7 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்கள் உள்ளடங்கும்.