சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கோடைகாலத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' என்னும் திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் கொண்டு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கவிழா சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் இன்று(ஏப்ரல்.20) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துக்கொண்டு ஆவினின் ஐஸ்க்ரீம் வாகனத்தினை கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து, சுயத்தொழில் மற்றும் வேலைவாய்ப்பினை உறுதிச்செய்யும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் ஐஸ்க்ரீம் விற்பனைக்கான பேட்டரி வாகனங்கள் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது.
ஆர்டர் செய்யப்படும் ஐஸ்க்ரீம்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தவேண்டும்
அதன்படி வழங்கப்பட்ட ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். இந்த வண்டிகள் ரூ.10,000 டெபாசிட் கட்டிய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வண்டி மூலம் வீடு வீடாக பெண்கள் சென்று விற்பனை செய்யவுள்ள நிலையில், இவர்களுக்கென தனி செயலி வழங்கப்பட்டுள்ளது. அந்த மொபைல் செயலி மூலம் விற்பனை செய்ய என்னென்ன ஐஸ் க்ரீம்கள் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே ஆர்டர் பணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டுமாம். மறுநாள் காலை அவர்கள் இருப்பிடத்திற்கே ஐஸ்க்ரீம்கள் டெலிவரி செய்யப்படும், அதனை கொண்டு பெண்கள் தங்கள் வியாபாரத்தினை துவங்கலாம். கமிஷன் முறையில் பெண்கள் வருவாய் ஈட்டலாம் என்று கூறப்படுகிறது.