தமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம்
தமிழகத்தில் முன்னதாக ஆவின் மூலம் மக்களுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் வரையே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆவின் பாலினை பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே, ஆவின் நிறுவனம் பாலின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. எனினும் மக்கள் ஆவின் பாலின் தரத்தின் மீது நம்பிக்கை கொண்டு பெற்று வருகிறார்கள். மேலும் ஆவின் பாலை மக்கள் பெறுவதற்கு உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் வழங்கி வருகிறது குறிப்பிடவேண்டியவை.
பால் நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை
இந்நிலையில் ஆவின் நிர்வாகம் மாதாந்திர அட்டை மூலம் பாலினை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் பாலினை பெறும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் இது குறித்த சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.