திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!
இலங்கையை சேர்ந்த 9 பேரை, NIA அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து நேற்று கைது செய்தனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடு பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகின்றனர். திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகளையும் குற்றத்தில் தொடர்பு உடையவர்களையும் இங்கு தான் தங்க வைத்திருப்பார்கள். தற்போது, பிற நாடுகளை சேர்ந்த 152 பேர் இந்த திருச்சி சிறப்பு முகாமில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, கேரள கடல் பகுதியில் ஒரு மீன்பிடி படகில் இருந்து 300கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதன்பிறகு, கடந்த ஜூலை 20ஆம் தேதி, NIA அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரோடு இந்த முகாமை அதிரடியாக சோதனை செய்தனர்.
9 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னணி!
சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட கேரளா போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் சிலருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவும் அதனாலேயே அந்த அதிரடி சோதனை நடை பெற்றதாகவும் கூறப்பட்டது. அப்போது நடந்த அந்த சோதனையின் போது, இலங்கையை சேர்ந்த 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், செல்போன்கள், பென்டிரைவ்கள், லேப்டாப்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதன் பின், இந்த முகாமில் இருப்பவர்கள் NIAவின் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்த வழக்கிற்கு தேவையான முதற்கட்ட ஆதாரங்களை சேகரித்த NIA, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கும் இலங்கையை சேர்ந்த 9 பேரை நேற்று(டிச:20) அதிரடியாக கைது செய்துள்ளனர்.