மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 8வது ஊதியக் குழு காலக்கெடு வெளியானது; கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு தொடர்பான தெளிவான தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதில், ஊழியர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சம்பள உயர்வு எப்போது கைக்கு வரும், நிலுவைத் தொகை கிடைக்குமா என்பது குறித்த முழுமையான விபரங்களை இங்கே காண்போம்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட காலக்கெடு
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், 8வது ஊதியக் குழு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி முறைப்படி அமைக்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாகத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31
பொதுமக்களிடம் கருத்து கேட்பு: மார்ச் 31 கடைசி நாள்
ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இதற்காக 'MyGov' இணையதளத்தில் 18 கேள்விகள் அடங்கிய விரிவான கேள்வித்தாள் பதிவேற்றப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், மாநில அரசுகள், தொழிற்சங்கங்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஆன்லைன் மூலம் கருத்துக்களைத் தெரிவிக்க 2026 மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே ஊழியர்களின் சம்பள உயர்வு தீர்மானிக்கப்படும்.
சம்பள உயர்வு
சம்பள உயர்வு எப்போது கைக்கு வரும்?
கணக்குப்படி 8வது ஊதியக் குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டும். இருப்பினும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்ய எடுக்கும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், உய உயர்த்தப்பட்ட சம்பளம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வர 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 நிதியாண்டு வரை ஆகலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். முந்தைய ஊதியக் குழுக்களின் போதும் இத்தகைய காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலுவைத் தொகை
நிலுவைத் தொகை கிடைக்குமா?
சம்பள உயர்வு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், நிலுவைத் தொகை குறித்து ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. 7 வது ஊதியக் குழுவின் காலாவதி தேதியான 2026 ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டே புதிய ஊதிய உயர்வு கணக்கிடப்படும். எனவே, பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று நிதி ஆலோசகர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
ஊதிய உயர்வு
எவ்வளவு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்?
சம்பள உயர்வு விகிதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. ஆனால், கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, 20% முதல் 35% வரை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6வது ஊதியக் குழுவில் 40 சதவீதமும், 7வது ஊதியக் குழுவில் சுமார் 23-25 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டது. இந்த முறை பிட்மென்ட் ஃபேக்டர் 2.4 முதல் 3.0 வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இருப்பினும், நாட்டின் பணவீக்கம் மற்றும் நிதி நிலைமையைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, தற்போதைக்குச் செயல்முறைகள் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. ஆனால், இறுதிப் பயன்களைப் பெற இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.