உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜன:7) உத்தரவிட்டார். நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் தாமி, பின் செய்தியாளர்களை சந்தித்து, "உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் முதல் கடமை. ஜோஷிமத்தில் ஆபத்தான வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார். ஜோஷிமத்தின் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களிலும் நாங்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், முதல்வர் தாமி இன்று ஜோஷிமத் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார்.
தொடர் கண்காணிப்பில் ஜோஷிமத் நகர்:
கர்வால் ஆணையர் சுஷில் குமார், பேரிடர் மேலாண்மை செயலர் ரஞ்சித் குமார் சின்ஹா மற்றும் நிபுணர்கள் குழு, பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை விரைவில் அப்புறப்படுத்தி, அவர்கள் குடியேறுவதற்கு மாற்று வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், மக்களை விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டுள்ளார். குறுகிய கால செயல் திட்டம், நீண்ட கால செயல் திட்டம் ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு திட்டங்களின் வேலைகளும் உடனடியாக முழு வீச்சில் தொடங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் தாமி கூறி இருக்கிறார்.