பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுவரையில்லாத அளவிற்கு ஏன் இத்தனை மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என அனைத்து கட்சியினரும் தங்கள் கேள்விகளை முன்வைத்ததோடு,
அதற்கான விளக்கத்தினை தமிழக அரசு அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வந்துவிடகூடாது என்பதில் தமிழகஅரசு உறுதியாக உள்ளது.
பிளஸ்2 தேர்வு எழுதாத 47,943மாணவர்களுள் 40,593பேர் கடந்த வருடம் 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்துக்குப்பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஆல்-பாஸ்
தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் அறிய தனி குழு அமைப்பு
மேலும் பேசிய அவர், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு மீண்டும் வர நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல் பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுத வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்கு ஆட்சியர்களின் ஒத்துழைப்பும், பிற துறைகளின் பங்களிப்பும் கட்டாயம் தேவை.
தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.
தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் துணைத்தேர்வு அவசியம் குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக பொது தேர்வு நடத்த முடியாத சூழலில் ஆல்-பாஸ் என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தான் தற்போது பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.