தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர். குறிப்பாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் பகுதி குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் மற்றும் மலையேறும் பயிற்சிகளை மேற்கொள்வதை சுற்றுலாப்பயணிகள் வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2018ம்ஆண்டு மார்ச் மாதம் குரங்கணி மலைப்பகுதியிலிருந்து கொழுக்குமலை ஏற்றத்திற்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 39 பேர் அடங்கிய 2 குழுக்கள் சென்றது. இவர்கள் ஒத்தமரம் வழியாக செல்கையில், எதிர்பாராவிதமாக காட்டு தீ எரிய துவங்கியுள்ளது. இவர்கள் தீ பரவுவதற்குள் சென்று விடலாம் என அலட்சியமாக அதே பாதையில் சென்ற காரணத்தினால் காட்டு தீயில் சிக்கி தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆளுக்கொரு திசையில் ஓடி பாறைகள், பள்ளங்களை தேடி ஓடியுள்ளார்கள்.
உலகையே உலுக்கிய குரங்கணி தீ விபத்து
ஆனால் மலை முழுவதும் தீ பற்றியதால் எல்லா பகுதிகளிலும் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதுகுறித்து குரங்கணி மக்கள் கூறுகையில், அப்பகுதிக்கு அன்று மலையேற சென்றவர்கள் தண்ணீர் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டு கொழுக்குமலைக்கு செல்கிறோம் என்றுக்கூறி சென்றது இன்றும் எங்களால் மறக்க முடியவில்லை. தீயில் சிக்கியப்பிள்ளைகளை காப்பாற்ற நாங்கள் அங்குமிங்கும் ஓடியது இன்றும் நினைவில் உள்ளது. தீயில் சிக்கிய குழந்தைகள் போட்ட அலறல் சத்தம் இன்றும் மலைமுழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினர். இந்த சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் அனுமதியில்லாமல் மலையேறக்கூடாது என்பது போன்ற பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.