களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றலாத்தளங்களில் மக்கள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் அதிகளவு கூட்டம் கூடும் என்பதால் அங்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல், சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. குறிப்பாக மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.
சிறப்பு வாகன தணிக்கை குழு அமைப்பு - வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும்
இதே போல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக காவல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு, அதில் தற்காலிகமாக நான்கு காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புவாகன தணிக்கை குழு மற்றும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதோடு, கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்காக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைதோறும் வண்டலூர் பூங்கா விடுமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.