மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உடற்கல்வி ஆசிரியரோடு வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியினை சுற்றிபார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்றபின்னர் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் சூழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாயனூர் போலீசார் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினரை வரவழைத்தனர்.
1 மணிநேர தேடலுக்கு பின்னர் கிடைத்த மாணவிகளின் உடல்கள்
மீட்புப்பணியினர் நடத்திய தீவிர தேடலில் சுமார் 1 மணி நேரம் கழித்து 4 மாணவிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டார். அதில், உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் தொகையினை முதலைமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், மாணவிகளின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆற்றில் குளிக்க சென்ற மாணவிகள் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.