மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர். போட்டியில் பங்கேற்ற பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியினை சுற்றிபார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் பெற்றபின்னர் காவிரியாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் சூழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு சுமார் 1மணிநேரம் கழித்து 4 மாணவிகளின் உடல்களையும் மீட்டனர். இதனையடுத்து, பலியான மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்திரண்டு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
இதனையடுத்து இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது கவனக்குறைவாக நடந்துகொண்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் போட்டுமணி உள்பட ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சாமி முத்தழகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் கரூர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே மாணவிகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ததை கண்டித்து உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இலுப்பூரிலும் 2 மணிநேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.