பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான இந்த பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வருடந்தொறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டு ஆட்சியில் உள்ள திமுக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெள்ளம், 1 முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ, 1000 பணத்தினை ரேஷன் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து தந்தது. அதன்படி, தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கப்பட்டது. தற்கான மொத்த தொகை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 4,39,699 பேர் பொங்கல் பரிசு தொகையினை வாங்கவில்லை
இந்த பணத்தினை ஏராளமான மக்கள் வாங்கி சென்றனர். எனினும், இவர்களுள் சில மக்கள் அந்த ரூ.1000 பணத்தினை வேண்டாம் என்றுகூறி வாங்க மறுத்து சென்றுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 15லட்சத்து 88ஆயிரத்து 937குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் பணம் வழங்க அதற்கான தொகை ரேஷன்கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 15லட்சத்து 60ஆயிரத்து 503பேர் பணம் வாங்கியுள்ளனர், மீதி பேர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 699 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பவந்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த தொகையினை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்திவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.