2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்
கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ரொக்க பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் தரவில்லை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டே ரொக்கப்பணம் தரப்படவில்லை என்று ஆளுங்கட்சியினர் விளக்கம் அளித்தாலும், இது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக அமைந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக முதல்வர் உணவுத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தாண்டு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை மட்டும் பரிசு பொருள் தொகுப்பு பையில் கொடுக்கப்படும் என்றும், ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக பொருட்கள் தருவதால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்கவே இம்முறை பொருட்கள் குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொங்கல் பண்டிகை என்றாலே, அதில் சர்க்கரை பொங்கலும், கரும்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்கிற பட்சத்தில், விவசாயிகளிடம் இருந்து கரும்பினை உடனடியாக கொள்முதல் செய்து அதனை பரிசு பொருள் தொகுப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.