உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரபல 'ஃபோர்ப்ஸ்' வார இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் சக்திவாய்ந்த பெண்களின்' பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரை தவிர, மேலும் 3 இந்திய பெண்மணிகளின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன் படி, HCL கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா அந்த பட்டியலில் 60வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் 70வது இடத்தை பிடித்துள்ளார். பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா 76வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களை தவிர, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரும், இசைக்கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
முதல் மூன்று இடத்தை பிடித்தது யார்?
'ஃபோர்ப்ஸ்' வார இதழிலில் வெளியிட்டுள்ள பட்டியலில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மே 2019இல் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர நிதியமைச்சராக ஆனார். அவர் அப்போது கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கும் தலைமை தாங்கினார். நிர்மலா சீதாராமன் அரசியலில் சேருவதற்கு முன்பு இங்கிலாந்தின் வேளாண் பொறியாளர்கள் சங்கம் மற்றும் பிபிசி உலக சேவை ஆகியவற்றில் பணியாற்றினார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் நிர்மலா சீதாராமன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.