சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டின் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் 200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(KSDMA), இது குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. "கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழு சூடானில் சிக்கித் தவிப்பதாக எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குழுவை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்." என்று KSDMA கமிஷனர் டாக்டர் மனோஜ் ராஜன் கூறியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்
"தற்போது அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் எங்கிருந்தாலும் அதே இடத்தில் தங்கியிருக்க வேண்டும், வெளியே செல்ல வேண்டாம். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை சரி செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது." என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடானில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புல்லட் காயத்தால் உயிரிழந்தார். சூடானில் வன்முறை வெடித்த உடனேயே, இந்தியர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் வலியுறுத்தியது.