ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள்
ஓசூர் அருகே உள்ள வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். நேற்று முன்தினம்(பிப்.,7) கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறி மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில் முகாமிட்டதாக கூறப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, பின்னர் பட்டாசு வெடித்து அந்த 5 யானைகளையும் தளி வனப்பகுதி வழியாக ஆனேக்கல் வனப்பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் இந்த 5 யானைகளுள் 3 யானைகள் தனியாக பிரிந்து மீண்டும் ஓசூர் அருகே நேற்று(பிப்.,8) காலை சுற்றி திரிந்ததாக கூறப்பட்டது.
உற்சாக குளியல் போடும் யானைகள்-வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
இந்நிலையில், அந்த யானைகள் மத்திகிரி அருகே உள்ள கர்னூர் ஏரியில் இறங்கி நீண்டநேரம் உற்சாக குளியல் போட்டுள்ளன. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்கு அளித்ததன் பேரில், 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று யானைகளை கண்காணித்து வருகிறார்கள். இதனையொட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏரி அருகில் மீன்பிடிக்கவோ, யானைகளை வேடிக்கை பார்க்கவோ யாரும் வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உற்சாக குளியல்போட்டு கொண்டுள்ள அந்த 3 யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த ஏரிக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு யானைகள் வந்துள்ளதால் மக்கள் அதனை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.