அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் 17 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் நகரில் வாகனம் ஓட்டுவதை தடுக்க சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு படியும், அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படியும் இந்த வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் 25 சிறுவர்கள் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், அதனை போக்குவரத்துத்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் என்றும் கூறப்படுகிறது.
பெற்றோர்களை வரவழைத்து வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து வாகனம் ஓட்டி பிடிபட்ட சிறுவர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர். இதன் பின்னர் மாலை 6 மணியளவில் பிடிபட்ட 25 சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு வாகன சோதனையில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் உலகநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.