கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு
நாளை(மார் 3) கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவை சேர்ந்த 2,408 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 60 விசைப்படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 நாட்டு படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு செல்பவர்களுக்கு இன்று(மார் 2) அடையாள அட்டை வழங்கப்படும். இதில் கலந்துகொள்பவர்கள் மதுபானங்கள் குடிப்பதற்கும் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா மார்ச் 3 முதல் மார்ச் 4 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை தேவைகளை கவனித்து கொள்ளும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம்
நாளை அதிகாலையில் நடக்கவிருக்கும் சுங்கத் துறையின் சோதனைக்குப் பின் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து படகுகள் கச்சத்தீவுக்கு கிளம்பும். நாளை மற்றும் நாளை மறுதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளுக்கு பின், வெள்ளிக்கிழமை மாலை படகுகள் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை கவனித்து கொள்கிறது.