செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் செயற்கையாக கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 21 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே செயற்கையாக கருத்தரிப்பு மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு 58 வயதாகிறது. மே 29, 2022 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா(28) கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்கள் ஒரே மகனை இழந்த மூஸ் வாலாவின் பெற்றோர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கை கருத்தரிப்பு மூலம் இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தனர்.
" எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்": பஞ்சாப் அரசு
இந்நிலையில், 58 வயதான சரண் கவுர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றெடுத்தது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசிடம் கோரியுள்ளது. இதனையடுத்து, இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் பஞ்சாப்-ஆம் ஆத்மி அரசு, "முதல்வர் பகவந்த் மான் எப்போதும் பஞ்சாபியர்களின் உணர்வுகளையும் கண்ணியத்தையும் மதிக்கிறார். ஆனால், அதற்கான ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது". என்று தெரிவித்துள்ளது. மேலும், " எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்றும் பஞ்சாப் அரசு மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது. இதற்கிடையில், பேசிய சித்து மூஸ் வாலாவின் தந்தை பால்கவுர் சிங், இரண்டாவது மகன் பிறந்த பிறகு, பக்வந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கம் தங்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.