2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.,1) தாக்கல் செய்தார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடியின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில் தற்போது விவசாயிகள் மற்றும் தானியத்திற்கான அறிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது, மோடி ஆட்சியில் 11.4கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 47.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கி மற்றும் நிதியியல் சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு. 2023ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.
சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை தரும் வகையில் புதிய திட்டங்கள்
இதனை தொடர்ந்து, சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்திக்கு மத்திய அரசு முன்னுரிமை தரும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. மேலும் குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும். கர்நாடகாவின் பத்ரா மேட்டு நிலத்திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.