Loading...
புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்
BRICS உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது

புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
06:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது. "உறுதித்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டியெழுப்புதல்" என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி நடத்துகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா உள்ளிட்ட உலக முன்னணித் தலைவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, 2019-க்கு பிறகு முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடியை இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கம்

பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார பலம் மற்றும் இந்தியாவின் நோக்கம்

உலக மக்கள் தொகையில் 49 சதவீதத்தையும், உலகளாவிய ஜிடிபியில் 39 சதவீதத்தையும் கொண்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட 11 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

இம்மாநாட்டின் மூலம் உலகளாவியத் தெற்கு நாடுகளின் குரலாக இந்தியாவை வலுவாகப் பதிப்பதே புதுடெல்லியின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், சாபஹார் துறைமுக மேம்பாடு, உள்ளூர் பணப் பரிவர்த்தனை மற்றும் விநியோகச் சங்கிலி முறைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ராஜதந்திர சமநிலை

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ராஜதந்திர சமநிலை

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வு ஆகிய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் இம்மாநாடு நடைபெறுகிறது.

மேற்கத்திய நாடுகளுடனான உறவைப் பாதிப்படையச் செய்யாமல், சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவது இந்தியாவிற்கு மிகப்பெரிய ராஜதந்திரப் பரிட்சையாக அமையும்.

இம்மாநாட்டிற்கான பிரம்மாண்ட பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் புதுடெல்லியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT