10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்றும், ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) நடத்தும் பேரணியில் உரையாற்ற உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்நிலையில், அதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா செல்ல உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவுக்குச் செல்லும் ராகுல் காந்தி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை விருந்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பயணத்தின் போது அமெரிக்காவில் உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களையும் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, அதிகாரப்பூர்வ அரசு பயணமாக அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறையாகும். இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கிற்கான இரு தரப்பு உறுதிப்பாட்டை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த அமெரிக்க பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.