இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். அப்போது அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே'வுடனான சந்திப்பு நேற்று(நவ.,2)நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பில், இந்திய அரசின் உதவி பெற்று இலங்கையில் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பில் மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் இணைந்து கொட்டக்கலை பகுதியில் அமைந்துள்ள மவுண்ட்வெர்மன் தேயிலை தோட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியோடு 10,000 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதனையடுத்து, இலங்கை நாட்டிற்கு மலையக மக்கள் சென்றதன் 200 ஆண்டுகளை நினைவுகூரும் விதமாக 'நாம் 200'என்னும் நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன்,'இலங்கை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலாக 10,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்று பிரதமர் வாக்குறுதியளித்திருந்தார்' என்று கூறினார்.
'இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்' - நிர்மலா சீதாராமன்
'அதனை நிறைவேற்றவே இந்நிகழ்வு நடந்துள்ளது' என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், 'இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பொழுது உடனே ரூ.33,000 கோடி நிதியுதவி செய்தது இந்தியா தான்' என்றும், 'உங்கள் வலியினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் சிறந்த நண்பன் என்னும் முறையில் இந்த உதவி செய்யப்பட்டது' என்றும் கூறினார். பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், கடன் சீரமைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டமானது 3ம்-கட்டத்தின் இறுதிப்பகுதியினை அடைந்துள்ள நிலையில், இதுவரை 3,700 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் கூடுதலாக 10,000 வீடுகள் கட்டப்படும் என்று மோடி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.