நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்
கோலிவுட்டில் 'எலிஜிபிள் பேச்சிலர்' பட்டியலில் உள்ள நடிகர்களில் நடிகர் விஷால் நீண்டகாலமாக இடம்பிடித்துள்ளார். அவரும் அதற்கேற்றாற்போல், அவரும், நடிகர் சங்கத்தின் கல்யாண மண்டபத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என சபதமெடுத்துள்ளார். ஆனால், அவரை பற்றி வதந்திகள் மட்டும் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் நடிகை வரலக்ஷ்மியுடன் கிசுகிசுக்கப்பட்டவர், பின்னர் நடிகை லட்சுமி மேனன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். லட்சுமி மேனனுடன், விஷால் இரண்டு படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, லட்சுமி மேனன் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
மீண்டும் தலைதூக்கிய விஷாலின் கல்யாண கிசுகிசு
தற்போது, 'சந்திரமுகி 2' படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறார் லட்சுமி மேனன். கூடவே, விஷாலுடன் திருமணம் என்ற கிசுகிசு மீண்டும் புகைய துவங்கியது. தற்போது, விஷால் இதற்கு பதிலளித்துள்ளார். இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "என்னை பற்றிய பொய்யான செய்திகளுக்கும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அது பயனில்லாதது என தெரியும். ஆனால் நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என பரவும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அது ஆதரமற்ற தகவல். அவர் ஒரு நடிகை என்பதை தாண்டி அவர் ஒரு பெண் என்பதால் தான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன்." என கூறியுள்ளார்