விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15க்கு ஒத்திவைப்பு; வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி
செய்தி முன்னோட்டம்
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், விஜய் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும், இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தனக்கும் தனது மகனுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
வீடியோ கான்பரன்ஸ்
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி
இன்றைய விசாரணையின் போது, விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் கேகேஎஸ்.ஜெயராமன் மற்றும் குமரேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், விஜய் ஒரு பிரபலமான நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது அவருக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டனர். எனவே, வழக்கில் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சசிகலா, விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
வழக்கு ஒத்திவைப்பு
வழக்கறிஞர்களின் கோரிக்கையும் வழக்கு ஒத்திவைப்பும்
விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிற்குத் தயாராக போதிய அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக, இத்தகைய குடும்ப விவகாரங்கள் ஊடகங்களில் செய்தியாக வருவதைத் தவிர்க்கவும், வழக்கை ரகசியமாக நடத்தவும் கோரி, விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மனு தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு
நீதிமன்ற வளாகத்தில் நிலவிய பரபரப்பு
விஜய் மற்றும் சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிந்ததிலிருந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் வழக்கத்திற்கு மாறான பதற்றமும், கூட்ட நெரிசலும் காணப்பட்டது. இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் காத்திருந்த நிலையில், அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.