'செல்ல மகளே': விஜய் குரலில், 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
விஜய்யின் 69-வது மற்றும் அவரது இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான 'செல்ல மகளே' என விஜய்யின் குரலில் ஒலிக்கும் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 27 (சனிக்கிழமை), மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மலேசிய தலைநகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு சாதாரண ஆடியோ வெளியீட்டு விழாவாக இல்லாமல், அனிருத் ரவிச்சந்தரின் நேரடி இசை நிகழ்ச்சியுடன் கூடிய ஒரு மெகா விழாவாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விவரங்கள்
இசை வெளியீட்டு விழாவின் விவரங்கள்
மலேசிய அரசு இந்த விழாவிற்கு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தற்போது 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், இவ்விழாவில் அவர் அரசியல் ரீதியான கருத்துக்கள் எதையும் பேசக்கூடாது என்றும், ரசிகர்களும் அரசியல் சார்ந்த உடைகளையே பொருட்களையோ எடுத்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விழா 'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடைபெறுகிறது. பொதுவாக விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் பாதுகாப்பு மற்றும் காப்புரிமை காரணங்களுக்காக யூடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. இருப்பினும், இந்த விழாவின் முக்கியத் தருணங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் தயாரிப்பு நிறுவனமான KVN Productions-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் (X மற்றும் Instagram) உடனுக்குடன் பகிரப்படும்.