பத்தே நாட்களில் பக்காவான கதை; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய 'வேட்டையன்' ரஜினிகாந்த்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீயாய் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜெ.ஞானவேல் குறித்து பேசிய வீடியோவை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் த.செ.ஞானவேல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பின்வருமாறு:- ஞானவேல் ஒரு பத்து நாட்கள் வேண்டும் என கேட்டுச் சென்றார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலேயே என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.
வேறொரு கோணத்தில் காட்டுவதாக கூறிய ஞானவேல்
அப்போது, லோகேஷ் மற்றும் நெல்சன் மாதிரி என்னால் படம் எடுக்க முடியாது. ஆனால், ரசிகர்களுக்கு உங்களை வேறொரு கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார். அதற்கு நான், அவர்கள் மாதிரி மட்டும் படம் வேண்டும் என்றால் அவர்களிடமே நான் போயிருப்பேன், நீங்கள் உங்கள் பாணியில் கதை எழுதி கொண்டு வாருங்கள் என்றேன். அதேபோல், பத்து நாட்களில் கதையை தயார் செய்து என்னிடம் கொண்டு வந்தார். அதில் கமர்ஷியலுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் சரியாக இருந்தன. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.