90களின் பிரபல குடும்பப் பட இயக்குனர் வி.சேகர் காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழ்த் திரையுலகில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் நகைச்சுவையைக் கலந்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிரபல இயக்குனர் வி.சேகர் (72), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) மாலை சென்னையில் காலமானார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நெஞ்சுவலி காரணமாக, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். திருவண்ணாமலை மாவட்டம் நெய்வாநத்தம் கிராமத்தில் பிறந்த வி.சேகர், தனது 19வது வயதில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் உதவியாளராகச் சேர்ந்து திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். மாநகராட்சி சுகாதாரத் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மாலை நேரக் கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டத்தையும் பெற்றார். கே.பாக்யராஜின் கதை இலாகாவில் பணியாற்றிய பிறகு, 'நீங்களும் ஹீரோதான்' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
படங்கள்
வி.சேகர் எடுத்த முக்கிய திரைப்படங்கள்
'நான் புடிச்ச மாப்பிள்ளை' படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற வி.சேகர், 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப் போச்சு' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி, குடும்பப் படங்களின் இயக்குனர் என்ற அடையாளத்தைப் பெற்றார். இயக்குனர் மட்டுமின்றி, தனது திருவள்ளுவர் கலைக்கூடம் நிறுவனம் மூலம் ஏய் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சின்னத்திரை தொடர்களையும் இயக்கி, ஓரிரு படங்களில் நடித்தும் உள்ளார். சிலை கடத்தல் வழக்கு உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கியதால் சினிமாவில் இருந்து சிறிது ஒதுங்கியிருந்தார். அவரது உடல் சனிக்கிழமை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிகிறது.