மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நகைச்சுவை நடிகை 'ஆச்சி' மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி இன்று (அக்டோபர் 23, 2025) காலமானார் என்ற செய்தி, திரையுலகை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான பூபதி, இன்று காலை 10.40 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது மறைவு, மனோரமா ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் சாதனை படைத்தவர். அவர் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததுடன், பல தலைமுறையினரால் நேசிக்கப்பட்டார். பூபதி, அவரின் ஒரே மகன் ஆவார்.
திரையுலகப் பயணம்
பூபதியின் திரையுலகப் பயணம்
பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அவர், நடிகர் விசு இயக்கிய "குடும்பம் ஒரு கதம்பம்" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும், தாயார் மனோரமா நடித்த "நான் பெத்த மகனே" படத்திலும் பூபதி நடித்திருந்தார். பூபதியின் மறைவு அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மனைவி பி. தனலெட்சுமி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மறைந்த பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை, தி.நகர், நீலகண்ட மேத்தா தெரு, வீட்டு எண் 9/5 இல் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு நாளை (அக்டோபர் 24, 2025) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.