LOADING...
நீண்டகால காதலி அகிலாவை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
நீண்டகால காதலியை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

நீண்டகால காதலி அகிலாவை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
03:31 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியான அகிலா ஆகியோரின் திருமணம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பள்ளிப்பருவ நண்பர்களாகப் பழகி, பின்னர் காதலாக மாறிய இவர்களின் உறவு, இருவீட்டாரின் முழுச் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அபிஷன் தனது முதல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, மேடையிலேயே அகிலாவிடம் சம்மதம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டனில் திருமணம்

மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, சென்னை போயஸ் கார்டனில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா விஜயன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இயக்குநர்கள் பூ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், தனது உதவி இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் தற்போது அபிஷன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.