தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!
யதார்த்த நடிப்பால் 55 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் 'ஆச்சி' மனோரமா. இன்று அவரின் பிறந்தநாள். ஆட்சி மனோரமாவின் இயற்பெயர் 'கோபிசாந்தா'. தனது பன்னிரண்டாவது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். தான் பணியாற்றிய நாடக சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனோரமா கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையும் பெற்றெடுத்தார். அதன் பிறகு ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்தனர். அந்த நாடகக் சபாவை விட்டு மனோரமா வெளியே போய்விடக்கூடாது என்பதற்காகத் தான் ராமநாதன் திருமணம் செய்து கொண்டார் என்பது அவருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வந்தார்.
'ஆச்சி மனோரமாவின்' பிறந்த நாள்
தமிழ் சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1958 ஆம் ஆண்டு ''மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக திரையுலகத்திற்குள் நுழைந்தார். தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை இவரையே சேரும். 1960 & 1970-களில் நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகை ஆனார். தனது நகைச்சுவை திறனால் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இந்த தலைமுறை நடிகர்கள் ஆன ரஜினிகாந்த், கமல், விஜய் ஆகியோர் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 2015ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உடல் நலக்குறைவால் உலகை விட்டு மறைந்தார். தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகையாக இன்றும் ஆட்சி செய்து வருகிறார்.