நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69. பாரதிராஜாவின் அசிஸ்டண்டாக தனது திரை பயணத்தை துவங்கியவர் மனோபாலா. பல படங்களில், பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். நடிகர் சங்கத்திலும் முனைப்போடு செயல்பட்டவர். 'சதுரங்க வேட்டை' உட்பட பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் மக்களின் மனதை கவர்ந்தவர். இவர் சில மாதங்களுக்கு முன்னால், இதயகுழாய் அடைப்பிற்காக ஆஞ்சியோ செய்துகொண்டார். அதில் இருந்து மீண்டு வரும் வேளையில், அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கும் போது தான், இவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.
நாளை இறுதி ஊர்வலம்
இவரின் திடீர் மறைவு, திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பாரதிராஜா, படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளியூரில் இருந்தார். மனோபாலா இறந்த தகவல் கேள்விபட்டவுடன், அவர் சென்னைக்கு விரைந்து கொண்டிருப்பதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த்தும், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ட்வீட் செய்துள்ளார். கமலின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட மனோபாலாவின் மறைவு, தனக்கு மிகுந்த துயரத்தை தருவதாக கூறியுள்ளார். அவரின் இறுதி ஊர்வலம், நாளை காலை நடைபெறும் என அவரது மகன் ஹரிஷ் மனோபாலா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.