LOADING...
திரையரங்க வருவாயை பாதுகாக்க புதிய விதிமுறைகள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் அவற்றின் ஓடிடி வெளியீடுகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது TFPC

திரையரங்க வருவாயை பாதுகாக்க புதிய விதிமுறைகள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2025
02:32 pm

செய்தி முன்னோட்டம்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், திரையரங்குகளில் கிடைக்கும் வருவாயைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் அவற்றின் ஓடிடி வெளியீடுகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு முடிவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இனிமேல் தயாரிப்பாளர்களுடன் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டையும் பகிர்ந்து கொள்ளும் புதிய வருவாய் பகிர்வு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். திரையரங்கு, ஓடிடி, மற்றும் சாட்டிலைட் வருவாய் குறைந்து வருவதால், திரையரங்க வருவாயைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள் மற்றும் புதிய விதிமுறைகள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியான பிறகு 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். நடுத்தர நடிகர்கள் நடிக்கும் படங்கள் 6 வாரங்கள் கால அவகாசத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிறு பட்ஜெட் படங்கள் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடப்படலாம். திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழு- திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்படும். ஆண்டொன்றுக்கு வெளியாகும் சுமார் 250 சிறு மற்றும் நடுத்தரப் படங்கள் திரையரங்குகளை அணுகுவதற்கு இந்தக் குழு வழிவகை செய்யும்.

இணைய தொடர்

வெப் தொடர்களுக்கு எதிர்ப்பு

நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வலைத்தொடர்கள் (Web Content) உருவாக்குவதைவிட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்வை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் படங்களைத் திரையிடக் கூடாது என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளது. "திரை விமர்சனம்" என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது TFPC மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். தனியார் அமைப்புகள் விருது விழாக்கள் அல்லது இசை நிகழ்ச்சிகளை நடத்த, TFPC மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.