LOADING...
ரஜினிகாந்தின் 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்! பின்னணி என்ன?
சுந்தர் சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்தின் 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்! பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2025
02:38 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலம் படத்திற்குப் பிறகு, சுமார் 28 ஆண்டுகள் கழித்து ரஜினி மற்றும் சுந்தர் சி மீண்டும் இணையவிருந்ததால், இப்படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

சுந்தர் சி-யின் விலகல் அறிக்கை

'தலைவர் 173' படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை சுந்தர் சி தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். "திடீரென ஏற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த முக்கியமான படத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எனது கனவு படங்களில் ஒன்று, ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மால் கனவுகளை விட நியதியை பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும்," என்று அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருபெரும் ஆளுமைகளுடன் இணைந்த அனுபவங்களும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களும் விலைமதிப்பற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்விகள்

சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ள கேள்விகள்

சுந்தர் சி விலகியதன் பின்னணி குறித்து சினிமா வட்டாரத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன: கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்லது வேறு ஏதேனும் சண்டையால் அவர் விலகினாரா? சுந்தர் சி தற்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிக்கவுள்ள ஒரு படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பணிகள் காரணமாக அவர் விலகினாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சுந்தர் சி தனது அறிக்கையின் முடிவில், ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளிடம் மன்னிப்புக் கோரியதோடு, விரைவில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்விப்பதாக உறுதியளித்துள்ளார்.