நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாள் இன்று: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்க
பிரபல கோலிவுட் நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில், அவரை பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்க. நடிகர் சித்தார்த், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை DAV பள்ளியில், தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை முடித்தவர். அதன் பின்னர், தனது தந்தையின் வேலை காரணமாக, குடும்பத்துடன் டெல்லிக்கு மாற்றல் ஆகி சென்றார்கள். அங்கே பள்ளி இறுதி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்தார் சித்தார்த். கல்லூரி நாட்களிலேயே, மேடை பேச்சு, நாடகங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் சித்தார்த். பல விவாத மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, அதற்கான விருதுகளையும் தட்டி சென்றுள்ளார். பள்ளிநாட்களிலேயே, பிரபல விளம்பர இயக்குனர் ஜெயேந்திரா மூலம், 'பேனிஷ்' என்ற கொசுவர்த்தி சுருள் விளம்பரத்தில் டப்பிங் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 8 மொழிகளில்!
உதவி இயக்குனர் முதல் நடிகர் வரை
மேலாண்மை சம்மந்தமாக கல்லூரி படிப்பை முடித்த கையோடு, இயக்குனர் ஜெயந்திராவிடமும், P.C.ஸ்ரீராம்மிடமும் உதவி இயக்குனராக சேர்ந்தார். அதன் பின்னர், 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில், மணிரத்னமிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அந்த திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்திலும் தோன்றியிருப்பார். எழுத்தாளர் சுஜாதாவின் வலியுறுத்தலால், ஷங்கர் இயக்கும் 'பாய்ஸ்' திரைப்படத்திற்கு விண்ணப்பித்தார் சித்தார்த். அதன் பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் நடித்தார். சுவாரசியமாக, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ரங் தே பஸந்தி என்ற மூன்று திரைப்படங்களிலும் மாதவனுடன் நடித்துள்ளார். தற்போது 'டெஸ்ட்' என்ற படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்தான சித்தார்த், சிறிது காலம் சமந்தாவை காதலித்தார். தற்போது, அதிதி ராவ் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறார்.