ரஜினிகாந்தின் 'லால் சலாம்' திரைப்பட டீசர் வெளியானது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இத்திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்'என்னும் கதாபாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு வருவார் என்ற தகவலையும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே இப்படத்தின் டீசர் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இன்று(நவ.,12)வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது என்பதை நடிகர் ரஜினிகாந்த் வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.