'போய் வேலை பாரு, பணம் சம்பாதி;' கோவிட் லாக்டவுனில் மாதவனை வீட்டை விட்டு துரத்திய மனைவி; சுவாரசிய பின்னணி
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரையுலகின் சாக்லேட் பாய் மற்றும் வெர்சடைல் நடிகரான மாதவன், தற்போது தனது திரைப்பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையைக் கிளப்பி வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், 2020 கோவிட் லாக்டவுன் சமயத்தில் தனது மனைவி சரிதா பிர்ஜே தன்னை எப்படி வேலைக்குத் தள்ளினார் என்பதை நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். "நீ வீட்டில் சும்மா இருப்பதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. வெளியே போய் ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதி" என்று அவர் கிண்டலாகக் கூறி தன்னை ஊக்குவித்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகள்
சினிமாவை விட்டு விலகிய அந்த 4 ஆண்டுகள்
2011 ஆம் ஆண்டு தனது உச்சகட்ட புகழில் இருந்தபோது மாதவன் திடீரென ஒரு நீண்ட இடைவெளி எடுத்தார். அதற்கான சுவாரசியமான காரணத்தை அவர் இப்போது உடைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஆரஞ்சு பேண்ட் மற்றும் பச்சை நிற சட்டை அணிந்து மாதவன் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு விவசாயி இவரை ஒருவித ஏளனத்துடன் பார்த்துள்ளார். "நான் ஒரு சிறந்த பேச்சாளர், குதிரை சவாரி தெரியும், துப்பாக்கி சுடத் தெரியும், விமானம் ஓட்டத் தெரியும். ஆனால் இதையெல்லாம் சினிமாவில் காட்டாமல், யாரோ ஒருவரின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறேனே" என்று மாதவன் அப்போது உணர்ந்துள்ளார்.
விருது
பத்மஸ்ரீ விருது முதல் துரந்தர் வரை
இந்த 4 ஆண்டுகளில் தாடி வளர்த்துக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரிடமும் பேசி, நிஜ வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்துகொண்டார். அந்த அனுபவமே விக்ரம் வேதா, இறுதிச் சுற்று மற்றும் ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாதவனுக்குத் தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இது அவரது கலைச் சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் மூலம் தேசிய விருதை வென்று இயக்குநராகவும் முத்திரை பதித்தார். தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் வரும் மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.