'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?
செய்தி முன்னோட்டம்
ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கைக் கடந்து உணவுத் துறையிலும் கால் பதிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'நெட்ஃபிலிக்ஸ் பைட்ஸ்' என்ற புதிய உணவகத்தைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
சரி, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கிறீர்களா? நெட்ஃபிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் பல்வேறு சமையல் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியிருக்கும்.
அந்தத் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இடம் பெற்ற சிறப்பு சமையலர்களைக் கொண்டு, தங்கள் உணவகத்தில் உணவுகளைத் தயாரிக்கவிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ்.
அதாவது, குறிப்பிட்ட தொடரில் பார்த்த, சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட உணவுகளை ருசிபார்க்க புதிய வாய்ப்பை தங்களுடைய இந்த புதிய உணவகத்தின் மூலம் அளிக்கவிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.
நெட்ஃபிலிக்ஸ்
'நெட்ஃபிலிக்ஸ் பைட்ஸ்' உணவகம்:
தற்போது இரண்டு வாரத்திற்கு மட்டம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, முன்பதிவு முறையில் இந்த புதிய உணவகத்தில் உணவருத்த வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது நெட்ஃபிலிக்ஸ்.
இதற்காகவே தனியாகத் தொடங்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தின் மூலம் நாம் விரும்பும் நாளைத் தேர்ந்தெடுத்து ஒரு நபருக்கு 25 டாலர்கள் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இத்துடன் அத்தளத்தின் உள்ள 'டிரிங்க் மாஸ்டர்ஸ்' நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களை வைத்து தனித்துவமான சிறப்பு காக்டெயில்களையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளில் பெறும் அனுபவத்தை, நிஜ உலகிற்கு கொண்டு வருவதில் அதீத் ஆர்வம் காட்டி வருகிறது நெட்ஃபிலிக்ஸ். அந்த வகையில் இது அந்நிறுவனத்தின் இரண்டாவது முயற்சி.