'மார்க் ஆண்டனி' - ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ரூ.1 விவசாயிகளுக்கு என விஷால் அறிவிப்பு
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'. இப்படம் நேற்று(செப்.,15) திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் அபிநயா, ரித்து வர்மா, ஒய்.ஜி.மகேந்திரன், செல்வராகவன், கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைம் ட்ராவல் கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை விஷால் நடித்து வெளியான படங்களின் சாதனையினை முறியடித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் எதிர்பார்ப்பதை விட அதிகளவு வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆபிசில் பேசப்படுகிறது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் ட்விட்டரில் பதிவிட்ட விஷால்
வெகுநாட்களுக்கு பிறகு விஷாலுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியினை அளித்துள்ள நிலையில், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில மக்களும் இப்படத்தினை பார்த்து மனதார வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்துக்களை மனதில் வைத்து கொண்டு அடுத்தடுத்து ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல படங்களை கொடுப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், "முன்பு கூறியது போல், ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயினை விவசாயிகளுக்கு வழங்குவேன்" என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷால் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.