நாயகன் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்ட அவரது பெரு வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றான நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி என்.செந்தில்குமார், காப்புரிமை மீறலுக்கான முதல்நிலை ஆதாரம் இல்லை என்று கண்டறிந்து, கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி கோரிய இடைக்காலத் தடையை நிராகரித்தார். உரிமைதாரர்களான ஏடிஎம் புரொடக்ஷன், சுரபி எண்டர்பிரைசஸ் மற்றும் விஎஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, 2023 ஜூன் 30 முதல் 2035 நவம்பர் 17 வரை, மறுவெளியீடு மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உட்படப் பல உரிமைகளைப் பெற்றதாகக் கூறி எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி இந்தச் சிவில் வழக்கை தாக்கல் செய்தது.
உரிமை
உரிமைக்காக ₹60 லட்சம்
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் எம்.ஸ்ரீராம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் மறுவெளியீடு மற்றும் விநியோக உரிமைக்காகத் தங்கள் நிறுவனம் ₹60 லட்சம் செலுத்தியுள்ளதாக வாதிட்டார். மேலும், அசல் உரிமையாளர்கள் காப்புரிமைச் சட்டத்தை மீறி, வேறு இரண்டு நிறுவனங்களுடன் (Qube Cinemas, UFO Movies) இணைந்து நாயகன் திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், விஎஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனம் திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்குச் சரியான உரிமத்தைக் கொண்டுள்ளது என்று வாதிட்டார். நாயகன் ஒரு சாகாவரம் பெற்ற கிளாசிக் திரைப்படம் என்றும், அதன் மறுவெளியீடு தங்கள் நிறுவனத்தின் உரிமைக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிமன்றம் எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரியின் கோரிக்கையை நிராகரித்தது.