ஜனநாயகன் டிக்கெட் விலை கட்டுப்பாடு? விஜய் கடைசி படத்திற்கு ரூ.190 கட்டணக் கட்டுப்பாடு குறித்து வெளியான முக்கியத் தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகராக இருந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், திரையரங்குகளில் ரசிகர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிக்கெட் விலையை, மாநிலத்தின் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விதிகளின்படி அதிகபட்சமாக 190 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தியேட்டர்கள் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. பொங்கல் பண்டிகை தாமதத்திற்குப் பிறகு இத்திரைப்படம் வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்பதிவு
உலகளாவிய முன்பதிவில் வேகம் காட்டும் ஜனநாயகன்
தமிழகத்தில் இந்தத் திரைப்படத்திற்கான முன்பதிவு வருகிற ஜூலை 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், உலகளாவிய அளவில் இதன் முன்பதிவு ஏற்கனவே புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
வர்த்தகக் கணிப்புகளின்படி, வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களின் அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே இந்தத் திரைப்படம் ஜூலை 16 ஆம் தேதிக்குள் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.
தெலுங்கில் ஜனநாயகுடு என்ற பெயரிலும், இந்தியில் ஜன்நேதா என்ற பெயரிலும் இந்தத் திரைப்படம் ஒரே நேரத்தில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.
தியேட்டர்கள் கண்காணிப்பு
மாநில விதிமுறைகளின்படி தியேட்டர்கள் கண்காணிக்கப்படும்
விஜய் தற்பொழுது முதல்வராக இருக்கும் சூழ்நிலையில், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது பொதுவாகக் காணப்படும் அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டண உயர்வுகளைத் தவிர்ப்பதற்காகத் திரையரங்குகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படலாம் என என்டிடிவி செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
தனது அரசியல் பதவியின் காரணமாகத் திரைப்படத்திற்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு, அது தவறான தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால், மாநிலத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வ கட்டண விதிகளின்படியே தியேட்டர்கள் இந்த விலையைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அண்டை மாநிலங்கள்
அண்டை மாநிலங்களில் எகிறிய கட்டணம்
தமிழகத்தில் வழக்கமான கட்டணக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் கண்காணிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் அதே வேளையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா போன்றவற்றில் நெகிழ்வுத்தன்மை கொண்ட டைனமிக் விலையிடல் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெங்களூரு போன்ற நகரங்களில் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் நாள் மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இதர மாநிலங்களில் ரசிகர்கள் பல மடங்கு கூடுதல் தொகையை செலுத்தி டிக்கெட்டுகளை வாங்கும் சூழல் நிலவுகிறது.
அதிகாலை காட்சி
வட இந்தியாவிலும் அதிகாலை காட்சிகளுடன் மாஸ் காட்டும் வரவேற்பு
விஜய் ஒரு நடிகராக இருந்து தற்பொழுது முதல்வராக மாறியுள்ளது பொதுமக்களிடையே இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவைத் தாண்டி வட இந்தியாவிலும் இந்தத் திரைப்படத்திற்குப் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சமயத்தில் பெரிய அளவிலான இந்தித் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாதது ஜனநாயகன் திரைப்படத்திற்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
மும்பையில் உள்ள தழிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சீயான், அந்தேரி மற்றும் மலாடு போன்ற மையங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளும், தென்னிந்தியா முழுவதும் அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன.