ஜெயிலர் 2 கிளைமாக்ஸ் சர்ச்சை! மோகன்லாலின் டூப் நடிகர் ஜோபி கொடகரா அளித்த பரபரப்பு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலகளவில் ரூ.540 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேத்யூ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், படத்தில் அவரது திரைத் தோற்ற நேரம் குறைவாக இருந்தது மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவருக்குப் பதிலாக அவரது உடல் சாயல் கொண்ட டூப் நடிகர் பயன்படுத்தப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் எழுந்த விவாதங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், படத்தில் மோகன்லாலுக்கு டூப்பாக நடித்த மிமிக்ரி கலைஞர் ஜோபி கொடகரா தற்போது இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
கிளைமாக்ஸ் சர்ச்சை
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பேசிய ஜோபி கொடகரா, படத்தில் தனது பங்களிப்பு மிகக் குறைவானது என்று தெளிவுபடுத்தினார்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், படத்தில் நான் இடம்பெற்ற ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே இறுதிப் பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன".
"அதுவும் கிளைமாக்ஸ் விமான நிலையக் காட்சியில் கார் ஓட்டும் போது கியர் மாற்றுவது மற்றும் ஆக்சிலரேட்டரை அழுத்துவது போன்ற கை மற்றும் கால்களின் சில பகுதிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன".
"கிளைமாக்ஸில் காட்டப்பட்ட முகம் என்னுடையது என்று கூறுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். படத்தில் எங்குமே எனது முகம் காட்டப்படவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
வருத்தம்
தான் செய்த ஒரு தவறு குறித்து ஒப்புதல்
அதேநேரம், படம் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் சர்ச்சை பெரிதாக வெடிப்பதற்குத் தனது ஒரு தவறே காரணம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
"ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலின் மேத்யூ தோற்றத்தில் நான் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததே நான் செய்த மிகப்பெரிய தவறு".
"அந்தப் பதிவே ரசிகர்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிட்டது" என்று ஜோபி வருத்தம் தெரிவித்தார்.
மேலும், படத்திலிருந்து மோகன்லாலின் சில காட்சிகள் நீக்கப்பட்டதாக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், டூப் கலைஞரின் இந்த நேரடி விளக்கம் தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.