'ஜனநாயகன்': 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? முதல் விமர்சனம் கூறுவது இதுதான்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்த உண்மையான தகவலையும், படத்தில் எந்த அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் இயக்குநர் H. வினோத் அளித்த பேட்டியின் மூலம் மற்றும் திரையரங்க விமர்சனங்கள் மூலம் அறிய முடிகிறது.
விளக்கம்
'ஜனநாயகன்' 50% மட்டுமே ரீமேக்
திரைப்பட வெளியீட்டிற்கு முன் அளித்த பேட்டிகளில், 'ஜனநாயகன்' படம் பகவந்த் கேசரி தழுவல் தான் என்பதை இயக்குநர் H. வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், அது முழுமையான ரீமேக் அல்ல என்பதில் அவர் தெளிவாக உள்ளார்.
பகவந்த் கேசரி படத்தின் மையக்கரு மற்றும் 50% கதையை மட்டுமே இதில் பயன்படுத்தியதாக வினோத் கூறியுள்ளார்.
படத்தின் முதல் பாதியில் 60% தெலுங்கு படத்தின் சாயல் இருக்கும்; ஆனால் இரண்டாம் பாதியில் 20% மட்டுமே அந்தத் தழுவல் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் 45 நிமிட பிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் அரசியல் சார்ந்த நகர்வுகள் அனைத்தும் எச். வினோத்தின் சொந்த உருவாக்கமாகும் என முதல் விமர்சனம் கூறுகிறது.
ஒப்பீடு
'பகவந்த் கேசரி'க்கும், 'ஜனநாயகன்' படத்துக்கும் உள்ள முக்கிய ஒப்பீடு
முக்கிய வேற்றுமையாக, பகவந்த் கேசரியில், கதையின் நோக்கம், நாயகனின் வளர்ப்பு மகளை (தெலுங்கில் ஸ்ரீலீலா) ராணுவத்தில் சேர்க்க போராடுவது. ஆனால் ஜனநாயகனில், வளர்ப்பு மகளை (மமிதா பைஜு) மனதளவிலும் உடலளவிலும் வலுவாக்குவது என கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தெலுங்கு ரசிகர்களுக்காக பகவந்த் கேசரியில் குறைவான அரசியல் வசனங்களும், கமர்ஷியல் டிராக்கும் இருந்தது. இதுவே ஜனநாயகனில் இரண்டாம் பாதியில் அரசியல் களம் குறித்தும், வினோத்தின் சொந்த கதையும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை காட்சிகளை பார்த்த ரசிகர்கள், குறிப்பாக மமிதா பைஜு மற்றும் விஜய் இடையேயான உணர்ச்சிப்பூர்வமான சில காட்சிகள் மட்டுமே 'பகவந்த் கேசரி'யை நினைவூட்டுவதாகவும், மற்றபடி H.வினோத்தின் அரசியல் வசனங்கள் படத்திற்கு தனித்துவமான மாஸ் அடையாளத்தை தருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.