தமிழ்நாட்டில் இருந்து கொரியா செல்லும் பெண்ணின் கதையை சொல்லும் உணர்வுப்பூர்வமான திரைப்படம், 'மேட் இன் கொரியா'
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ரா கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள திரைப்படம் 'மேட் இன் கொரியா'. தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து தென் கொரியாவிற்குச் செல்லும் ஒரு பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணமே இப்படத்தின் கதைக்களம். தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஊரில் வசிக்கும் செண்பா (பிரியங்கா மோகன்), தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கே-டிராமாக்களின் (K-Dramas) மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது கனவு தேசமான கொரியாவிற்குச் செல்லத் துடிக்கும் அவர், சில குடும்பச் சூழல்களால் எதிர்பாராதவிதமாக சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார். அங்கு அறிமுகமில்லாத மனிதர்கள் மற்றும் புதிய கலாச்சாரத்திற்கு இடையே அவர் தன்னைத் தானே எவ்வாறு செதுக்கிக்கொள்கிறார் என்பதே மீதிக்கதை.
கோலிவுட்
படம் எப்படி இருக்கிறது?
பிரியங்கா மோகன் தனது எதார்த்தமான நடிப்பால் செண்பா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். குறிப்பாக, அந்நிய தேசத்தில் அவர் படும் அவஸ்தைகளும், அங்கிருந்து அவர் பெறும் தன்னம்பிக்கையும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. சியோல் நகரின் அழகையும், அங்குள்ள எளிய மக்களின் வாழ்வியலையும் இயக்குநர் ரா.கார்த்திக் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார். கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் பேக் சி-ஹூன் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இப்படம் வெறும் காதலை மட்டும் பேசாமல், ஒரு பெண்ணின் சுய அடையாளம் மற்றும் தேடலைப் பற்றிப் பேசுகிறது. உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் அழகான பின்னணி இசை பார்வையாளர்களைக் கவர்கிறது. கே-டிராமா ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்தாலும், சாதாரண ரசிகர்களுக்கும் இது மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது.