'வெண்ணிலா கபடி குழு' முதல் 'லால் சலாம்' வரை: விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்
மாநில அளவிலான கிரிக்கெட் குழுவில் இடம்பிடித்த ஒரு வீரர், எதேச்சையாக நடிகரான கதை தான், விஷ்ணு விஷாலின் திரைப்பயணம். வித்தியாசமான படங்கள், சரியான கதைக்களம், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு என தனக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டவர். இன்று, அவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவ்லா தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு அக்காவும், ஒரு தம்பியும் உள்ளனர். திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த விஷ்ணு விஷால், மார்க்கெட்டிங் துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயற்பெயர் 'விஷால்'. ஆனால் ஏற்கனவே அதேபெயரில் நடிகர் இருந்ததால், 'விஷ்ணு' என பெயர் மாற்றம் செய்து, 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் அறிமுகமானார்.
தயாரிப்பாளராக வெற்றி அடைந்த விஷ்ணு விஷால்
தொடர் தோல்விகளுக்கு பிறகு, 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம், மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன் பின்னர், வெளியான 'ஜீவா' திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து, தயாரிப்பாளராக களம் இறங்கி, 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற காமெடி படத்தில் நடித்தார். 2018-இல் இவர் நடித்த 'ராட்சசன்' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. திரில்லர் படமாக உருவான இத்திரைப்படத்தின் வெற்றி, இதை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய ஊக்கப்படுத்தியது. தற்போது வரை, தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த திரில்லர் படமாக உள்ளது, 'ராட்சசன்' என்றால் அது மிகையில்லை. தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன், ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!