பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட ஒரு ஓடிடி தளத்திற்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியதற்காக இந்த தடை எனவும் கூறப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு OTT தளம், 2 மொபைல் செயலிகள், 4 சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஒரு டிவி செயலி ஆகியவற்றிற்கு தடை விதித்ததற்கான வழிமுறைகளை இந்தியா அரசாங்கம் நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஓடிடி தளத்தின் பெயர் 'விட்லி டிவி' என அறியப்படுகிறது. மேலும் அந்த தளத்தில் வெளியான ஒரு தொடர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஓடிடி தடை
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி வெளியான அந்த தொடரின் பெயர் 'Sevak: The Confessions '. அதில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வெப் தொடரில் இது வரை, மூன்று எபிசோடுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது. மேலும் இந்த தொடரில், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், அதன் பின்விளைவுகள், பாபர் மசூதி இடிப்பு, கிரஹம் ஸ்டெயின்ஸ் கொலை, மாலேகான் குண்டுவெடிப்பு போன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.