ஒரே நாளில் ரிலீஸாகும் 8 தமிழ் படங்கள்! பாக்ஸ் ஆபீஸில் உருவாகும் கடும் போட்டி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் ஒரே வாரத்தில் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், வருகிற ஜூலை 17ஆம் தேதியன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 8 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத பாக்ஸ் ஆபீஸ் மோதல், தமிழ் சினிமா வர்த்தக வட்டாரங்களிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கு வெளியீட்டு பட்டியலின்படி அன்பே டயானா, அருள்வான், அர்ஜுனன் பேரு பத்து, ஜி.டி.நாயுடு, தி டார்க் ஹெவன், பகவான், பிளாக் கோல்ட் மற்றும் தெலுங்கிலிருந்து டப் செய்யப்படும் ஓ சுகுமாரி ஆகிய 8 திரைப்படங்கள் ஜூலை 17 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில நடுத்தர பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் அடங்கும்.
திரையரங்கு
திரையரங்கு ஒதுக்கீட்டில் நிலவும் சிக்கல்கள்
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இரண்டு அல்லது நான்கு திரைகளை மட்டுமே கொண்டுள்ளன. இத்தகைய சூழலில், ஒரே நாளில் 8 படங்களை வெளியிடும்போது அவற்றுக்கான காட்சிகளை சமமாகப் பகிர்ந்தளிப்பது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக மாறும். இது குறித்து பிரபல விநியோகிஸ்தர் தனஞ்செயன், "நுகர்வோர் கலாச்சாரத்தின்படி, ஒரு சராசரி சினிமா ரசிகர் வார இறுதி நாட்களில் ஏதேனும் ஒரு திரைப்படத்தை மட்டுமே தேர்வு செய்து பார்க்க விரும்புவார். ஒரே வாரத்தில் 8 தேர்வுகள் இருக்கும்போது, ரசிகர்களின் எண்ணிக்கை சிதறடிக்கப்பட்டு வசூல் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், குறைந்தபட்சம் 3 முதல் 4 திரைப்படங்களுக்குக் கூட போதிய மக்கள் ஆதரவு கிடைக்காமல் போகலாம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.